Showing posts with label தொலைக்காட்சி. Show all posts
Showing posts with label தொலைக்காட்சி. Show all posts

Thursday, April 30, 2009

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி - சில எண்ணங்கள்

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வைல்டு கார்டு சுற்றின் முடிவில் பிரசன்னா மக்களின் வாக்குகள் மூலம் இறுதிப்போட்டிக்கு தேர்வு பெற்றிருக்கிறார். மக்களிடம்அவருக்கு நல்ல செல்லவாக்கு இருக்கிறது என பரவலாகக் கணிக்கப்பட்ட நிலையில், இம்முடிவு அதை உறுதிப்படுத்தியது. இதுபோன்ற போட்டிகளில் மக்கள் தேர்ந்த இசையறிவுடன்தான் வாக்களித்து தேர்வு செய்கிறார்களா போன்ற கேள்விகளும் கூடவே எழுப்பப்படுகின்றன. நிச்சயம் இசைத்துறையில் சீரிய தேர்ச்சி இருக்காதுதான். ஆனால், குறைந்த பட்சம் திரையிசை ஆர்வம் உடையவர்கள் தான் இப்போட்டிகளைத் தொடர்ந்து பார்த்துவருகிறார்கள். நடுவர்களின் கருத்துகளையும் கவனிக்கிறார்கள். அதையும் தாண்டி மக்களிடம் செல்வாக்குப் பெறுவதற்கான வேறு காரணிகள் என்னவாக இருக்கும்? மக்களுக்கு நெருக்கமான ஜனரஞ்சகப் பாடல்களைப் பாடுவதன் மூலம் அதைச் செய்துவிட முடியுமா?. எப்படியிருந்தாலும், இறுதியில் இந்த நிகழ்ச்சியும், திரையிசையும் மக்களுக்காகத்தான் எனும்போது அவர்களின் முடிவும் மதிப்புக்குரியதே.

மாற்றுக்கருத்துக்கள், மக்களின் திரையிசை ரசனையை உயர்த்தும் செயல்களையே பணிக்கின்றன.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இறுதிப்போட்டியில் சூப்பர் சிங்கர் வெற்றியாளரை முடிவு செய்யவும் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படுமா எனத்தெரியவில்லை. ஒருவேளை நடத்தப்பட்டால், அப்படிவரும் முடிவுகளிலும் மக்களின் இசையறிவு பற்றிய கேள்விகள் கூர்மையடையும். மக்களும், நிகழ்ச்சியின் நடுவர்களும் சேர்ந்து வெற்றியாளரை முடிவு செய்வதாக ஏற்கனவே சில நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், மக்கள் வாக்குகளின் பங்கு என்ன? நடுவர்களின் பங்கு என்ன? எப்படி முடிவு செய்கிறார்கள்? போன்ற தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதனால் மக்கள் வெறுமனே ஏமாற்றப்படுகிறார்களோ என்ற உணர்வும் இருக்கிறது. மக்களின் பங்களிப்பு நிச்சயம் நிகழ்ச்சியை சுவாரசியமாக்குவதோடு அவர்களின் ரசனை உணர்வை வெளிப்படுத்துவதாய் இருக்கும். அதேநேரம், நடுவர்களின் துறைசார்ந்த அனுபவத்துடனான வெற்றியாளர் தேர்வு திரையிசை வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை.

பேசாமல், 'விஜய் சினிமா விருகள்' வழங்கப்படுவதுபோல் நடுவர்கள் தேர்வாக ஒருவரையும் மக்களின் தேர்வாக ஒருவரையும் அறிவித்து விடலாம்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வைல்டுகார்டு சுற்றில் ஒரு போட்டியாளர் பாடிய 'சாவரே' என்ற ஹிந்திப் பாடல் கேட்ட முதல் முறையிலேயே மனதை வெகுவாகக் கொள்ளைகொண்டது. அப்பாடலின் பின்புலம் அறியக் கூகுளில் தேட, பண்டிட் குயின் ஹிந்தி படத்தின் பாடல் எனத் தெரிய வந்தேன். பெரும்பாலும் தமிழ்ப்பாடல்கள் மட்டுமே கேட்கும் என் போன்ற ரசிகர்களுக்கு, அப்பாடலின் அர்த்தம் புரியாவிட்டாலும் அந்த டியூனும் மிகநுணுக்கமாக அப்படாலைப் பாடிய அழகும் இனம்புரியாத ஒரு மனமயக்கத்தை ஏற்படுத்தியது. இதுவரை கேட்டிராவிட்டால், ஒருமுறை காதுகொடுங்கள்!

யூடிப்பில் கிடைத்த இக்காணொளியில் முசாரட் அப்பாஸ் என்பவரின் குரலில் அந்தப்பாடல்.



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு வருத்தம்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவர் ஏனோ கடந்த சிலவாரங்களாக இறுதியில் விடைபெறும்போது தன்பெயருடன் சாதிப்பெயரையும் இணைத்துக் கூறிவருகிறார். ஏனிந்த திடீர் மாற்றம்? இதன் நோக்கம்/தேவைதான் என்ன?

சொந்தப்பெயருடன் சாதிப்பெயரையும் சேர்த்துச் சொல்லும் மனோநிலை தமிழகத்தில் இந்தத் தலைமுறையில் இல்லையென நம்பியிருக்கும் நிலையில், இதுபோன்ற பின்னோக்கிய நகர்வுகள் பெரும் மனவருத்தத்தையும் அயர்ச்சியையும் கொடுக்கின்றன!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Monday, April 13, 2009

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒரு சாதாரண திரையிசை ரசிகனிடம் ஏற்படுத்தும் மாற்றங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நான் மிகவும் விரும்பிப் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. தொடர்ந்து பார்ப்பதின் பயனாய் பல மாற்றங்களை திரைப்பாடல்கள் கேட்பதில் இப்போது உணர்கிறேன். முதன்மையாக, ஒரு திரைப்பாடலில் உள்ள மிகநுணுக்கமான விடயங்களை என் போன்ற சாதாரண இசையறிவு உள்ளவர்களும் கவனித்து ரசிக்க முடிகிறது. அதோடு, பாடல் பாடுவதில் எடுக்கப்படும் சிரத்தைகளையும் நன்கு அறியமுடிகிறது. இந்நிகழ்ச்சியின் நடுவர்கள் கொடுக்கும் பாடல், மற்றும் பாடுதல் பற்றிய குறிப்புகளின் பங்கு இதில் மிக முக்கியமானவை. இப்பொழுதெல்லாம் எந்த ஒரு பாடலைக்கேட்டாலும் முன்பைவிட அதிக ஈடுபாட்டோடு அப்பாடலின் சிறப்பம்சங்கள், மற்றும் அதைப்பாடியவிதம் என மிக நெருக்கமாய் ரசிக்கிறேன். முன்பு கேட்டுரசித்த பாடல்களும் இன்று மீண்டும் கேட்கையில் ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது.

அதேசமயம், ஒரு திரைப்பாடலை நேரடியாகப் பாடக்கேட்டு அனுபவிப்பதற்கு நிகரான இன்பத்தை 'பதியப்பட்ட' பாடல்களை கேட்பதில் பெறமுடியவில்லையோ என்றும் இப்போது தோன்றுகிறது. ஒரு பாடலையே பகுதியாகப் பிரித்துப்பாடி பின் இணைத்தல்/கலத்தல் போன்ற தொழில்நுட்பங்கள், பதியப்பட்ட பாடல்களுக்கு ஜீவனற்ற ஒரு செயற்கைத் தன்மையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சில பாடல்களில் பாடகர் ஒரு வரியை முழுமையாக முடிப்பதற்கு முன்னரே அவரின் குரலில் அடுத்தவரி ஒலிக்கத் தொடங்குதல், மற்றும் ஒருவர் பாடிக்கொண்டிருக்கும் போது அவர் குரலிலேயெ மற்றொரு வரி அல்லது ஹம்மிங் இணையாக ஒலிப்பது போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்கள் கேட்க உறுத்துகிறது. சில பாடல்களில் இவ்வுத்தி கேட்க நன்றாக இருப்பினும்கூட, உணர்வுப்பூர்வமாக 'பாடலோடு ஒன்ற' இயல்வதில்லை (நல்ல அனிமேசன் அல்லது அட்வெஞ்சர் படம் பார்த்த உணர்வையே தருகிறது).

மொத்தத்தில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சாதாரண ரசிகனை மேம்பட்ட ரசனையுடன் திரைப்பாடல்களை கூர்ந்து அவதானிக்கச் செய்கிறது. விளைவாக, பாடல்-பதியும் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் செயற்கைத்தன்மையால், நல்ல பாடல்கள் தரும் அருகாமையை சிலநேரங்களில் இழக்கவும்நேர்கிறது.


Pages

Flickr