'மாயை' என்ற வார்த்தைக்கு இந்த உலகம் கட்டமைத்திருக்கும் (கட்டமைத்துக்கொண்டிருக்கும்) ஒரு தோற்றத்தினைப் பற்றிய, குறிப்பாக, ஆனந்த விகடனில் வெளிவரும் 'ஹாய் மதன்' என்ற கேள்வி-பதிலில் மாயை என்ற கேள்விக்கான பதிலின் எதிர்வினையே இது.
அந்த கேள்வி பதிலை அப்படியே இங்கு இட்டுள்ளேன்.
=======================================================
ஆனந்த விகடன் 03-12-2008: ஹாய் மதன் கேள்வி-பதில் :
கேள்வி: 'எல்லாமே மாயை' என்கிறார்கள் ஞானிகள். இதை (நீங்கள் நம்பினால்) உங்கள் ஸ்டைலில் விளக்கவும்?
பதில்: அது சத்தியமான வார்த்தை. உதாரணமாக, 'நில்' என்கிறோம். உடனே நிற்கிறீர்கள் அல்லவா? இதுவே மாயைதான். காரணம், எதுவுமே நிற்பதில்லை. பூமி ஒரு நொடிக்கு 460 மீட்டர் வேகத்தில் நகருகிறது. அல்லது சுழல்கிறது. அதாவது மணிக்கு 1,000 மைல்கள் வேகம். பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. ஒரு விநாடிக்கு 30 கி.மீ. வேகத்தில். மொத்தமாக நம் சூரிய மண்டலம் பால்வீதியை (Milky way galaxy) விநாடிக்கு 220 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிறது. பால்வீதியும் விநாடிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் Great Attractor என்கிற, அகண்ட கண்டத்தில் 15 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒரு பகுதியை நோக்கி விரைந்துகொண்டு இருக்கிறது. மொத்தத்தையும் கூட்டினால் நீங்கள் விநாடிக்கு பல்லாயிரக்கணக்கான கி.மீ. வேகத்தில் (எப்போதும்) நின்றபடி போய்க்கொண்டு இருக்கிறீர்கள். பூமி என்பதே அந்தரத்தில் இருப்பதால் பறந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதே சரியானது.
இப்போது சொல்லுங்கள். 'நில்' என்பது மாயைதானே?
=======================================================
'நிற்பது' என்ற செயல் மாயையானது என்று எவ்வளவு பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் குறிப்புகளோடு ஒப்பிட்டு விளக்கியிருக்கிறார். இதைவிட அறிவியலுக்கு வேறு இழுக்கு ஏதும் இருக்கமுடியாது. எல்லாம் மாயை என்று அறிவியலாளர்கள் எண்ணியிருந்தால் இந்த அறிவியல் உண்மைகளையே இவர் குறிப்பிட்டு இருக்கமுடியாது என்று இவருக்கு தெரியாதா அல்லது தெரியாததுபோல் இத்துணை உண்மை கண்டுபிடிப்புகளையும் மாயை என்ற வார்த்தைக்குள் அடைக்க முயல்கிறாரா? நல்லவேளையாக அறிவியல் செய்திகளனைத்தும் மாயை என்று நேரிடையாக கூறாமல் விட்டுவிட்டார்.
மாயை என்பது ஒரு மதம் சார்ந்த சொல்; அதை எப்போதும் அறிவியலோடு தொடர்பு படுத்த முடியாது. இதை ஒரு மதத்தலைவர் சொல்லியிருந்தாலாவது விட்டுவிடலாம், ஆனால் மதன் கூறியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
'நிற்பது' என்பது அறிவியலின்படி ஒரு சார்பியல் செயலாகும். இங்கு சார்பு என்பது மறைந்திருக்கிறது. உதரணமாக, பேருந்தில் நடத்துனர் 'இருக்கையில் அமருங்கள்' என்று சொன்னால், அது 'பூமியை சார்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தில் இருக்கும் இருக்கையில் அமருங்கள்' என்பதையே குறிக்கிறது. இப்படி பல வார்த்தைகள் எல்லா மொழிகளிலும் சார்பு என்ற பொதிந்துகிடக்கிற பொருளோடுதான் சேர்ந்து வரும் ( உ-ம்: வேகம், தூரம்). பேருந்தினுடைய வேகமானது பூமியின் மேற்பரப்பில் ஒரு நிலையான இடத்தை சார்ந்தே குறிக்கப்படுகிறது. அதாவது, சாலையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பேருந்து நகர்ந்த தொலைவு / எடுத்துக்கொண்ட நேரம். இதுவே, நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தில் இருக்கும் ஒருவர் அவருக்கு எதிர்திசையில் செல்லும் பேருந்தை பார்க்கும் பொழுது அது மிக வேகமாகச் செல்வதாக உணர்வார் (இரண்டு பேருந்துகளின் வேகத்தினுடைய கூட்டுத்தொகை). இவ்வாறான சார்பியலை தெளிவாக விளக்க கலிலியோ மற்றும் ஐன்ஸ்டைன் போன்ற அறிவியலாளர்கள் சார்பியல்/ சிறப்பு சார்பியல் தத்துவங்களைப் படைத்திருக்கின்றனர். இந்த சார்பியல் விதிகளைப் பற்றி மதன் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை(?!). எனவே, இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அறிவியல் சாயம் பூசாமல் இருக்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
ஒருவேளை, Great Attractor என்கிற, அகண்ட கண்டத்தில் 15 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு பகுதியை நோக்கி விநாடிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் விரைந்துகொண்டு இருக்கிற பால்வீதியில், விநாடிக்கு 220 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிற சூரிய மண்டலத்தில், விநாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சூரியனையும் சுற்றிக்கொண்டு, நொடிக்கு 460 மீட்டர் வேகத்தில் சுழல்கிற பூமியைச் சார்ந்து இந்த இடத்தில் நிற்கிறோம் என்று சொன்னால் இது மாயை இல்லை என்று ஏற்றுக்கொள்வாரோ?
அறிவியல் மற்றும் மதம் பற்றி முனைவர். சந்தனா சக்கரவர்த்தி, "
அறிவியலும் மதமும் ஒன்றாகிவிடமுடியுமா?" என்ற தலைப்பில் மார்ச் 16-31, 2009 உண்மை இதழில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
பின்குறிப்பு : இந்த எதிர்வினையை, அப்போதே ஆனந்த விகடனின் பின்னூட்டத்தில் எழுத நினைத்தேன். ஏனோ முடியாமல் போய்விட்டது. முனைவர். சந்தனா சக்கரவர்த்தி அவர்களின் கட்டுரையை வாசித்ததும், அவர் கூறிய அறிவியல் சாயம் மதனின் இந்தப் பதிலில் இருப்பதாக நினைவிற்கு வந்ததால் இப்போது பதிகிறேன்.
=============================================