(மக்களவைத் தேர்தலில் தமிழக முடிவுகளைப் புரிந்து கொள்ளும் ஒரு முயற்சி)
இந்த முறை, தமிழகத்தைப் பொறுத்தவரை ஈழத்தமிழ் உறவுகளின் இன்னல்களுக்குத் துணைபோனவர்களுக்கு மக்கள் தம் எதிர்ப்பைகாட்ட கிடைத்த ஒரு வாய்ப்பாக தேர்தல் முன்னிறுத்தப்பட்டது. ஆனால், பெரும்பாலான இன உணர்வாளர்களின் கணிப்பை, எதிர்பார்ப்பை மீறிய முடிவுகள் கிடைத்திருக்கின்றன. ஊரில் வெற்றிக்கூட்டணிக்கு வாக்களித்த சிலரிடம் பேசிப்பார்த்தேன், என் தந்தையார் உட்பட. இவ்வாட்சியின் (நல, இலவச) திட்டங்கள் ஏதோ ஒரு விதத்தில் அவர்களை சென்றடைந்திருப்பதையே குறிப்பிட்டார்கள். கடன் தள்ளுபடி, இலவசத் தொலைக்காட்சி, மலிவுவிலை அரிசி..... இப்படி ஆளாளுக்கு ஒன்று. (அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இதற்கான நன்றியுணர்ச்சியைக் காட்டியிருக்கலாம்?!).
சாதாரண மக்களுக்கு அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக் முன்னால் இனநலன் பெரிதாகத் தெரிவதில்லை. தமிழர்பிரச்சனை இன்று உச்ச கட்டத்தில் இருக்கும் போதே இந்த நிலமை என்றால்..... உண்மையில் தமிழின உணர்வாளர்களுக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கும். ஈழத்தமிழர்களுக்கான குரல்களை, தியாகங்களை அலட்சியமும் அவமானமும் செய்த சில காங். தலைவர்களை தமிழக மக்கள் குறி வைத்து தோற்கடித்தது அவர்களுக்குக் குறைந்தபட்ச ஆறுதல்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெற்றிக்கூட்டணியில், திமுக போட்டியிட்ட 21-ல் 17 தொகுதிகளை (81%) கைப்பற்ற, காங். 16-ல் 9-தொகுதிகளையே (56%) வென்றிருக்கிறது. இவ்விரு கட்சிகளும் வென்ற, தோற்ற தொகுதிகளில் வாக்குவித்தியாசங்களின் சராசரி கீழே இருக்கிறது.
வென்ற தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் (சராசரி)
திமுக - 83,878
காங். - 37,367தோற்ற தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் (சராசரி)
திமுக - 39,946 காங். - 42,244
காங். வெற்றி பெற்ற சராசரி வாக்குகள் வித்தியாசத்தைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இது அதன் கூட்டணிக்கட்சியான திமுகவோடு ஒப்பிட்டால் எதிர்மறையாக இருப்பதுடன், பெரும் வாக்கு வித்தியாசமும் புலப்படுகிறது.
இம்முடிவுகள், திமுக கூட்டணிக்குள்ளேயே திமுக-க்கு ஆதரவு காங்கிரசுக்கு எதிர்ப்பு என்பதுபோன்ற ஒரு மனோநிலை வாக்காளர்கள் மத்தியில் நிலவியிருந்ததின் வெளிப்பாட்டை உணர்த்துகிறது. ஆளும் கட்சியின் திட்டங்களினால் திமுகவுக்கு ஆதரவான ஓர் அலை மக்களிடம் இருந்த வேளையில், ஈழப்பிரச்சனையால் காங்கிரசுக்கு எதிரான ஒரு மனநிலையும் அவர்களிடம் இருந்திருக்கிறது எனக் கணிக்கலாம். இதன் அடிப்படையில் பார்த்தால், ஈழப்பிரச்சனையால் பாதிப்புக்கள்ளான காங்கிரசை திமுகவே கரையேற்றியிருக்கிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தேமுதிக வாக்குகளைப் பிரித்தது அதிமுக+ வெற்றியைப் பறித்துவிட்டதாகவும், அக்கூட்டணியில் இணைந்திருந்தால் அதிமுக+ பெரும்பான்மையான தொகுதிகளில் வென்றிருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. தேமுதிக கட்சிக்கு விரும்பி வாக்களிப்பவர்கள் பெரும்பாலும் திமுக, அதிமுக இரண்டுக்கும் ஒரு மாற்று வேண்டும் என நினைப்பவர்கள் தான். தேமுதிக போட்டியிடாதிருந்தால் அல்லது அதிமுகவோடு கூட்டணி சேர்ந்திருந்தால், மாற்றுவேண்டும் என நினைப்பவர்களின் வாக்குகள் அனைத்தும் நிச்சயம் அதிமுக+ க்கு சென்றிருக்கும் என்று கூறமுடியாது.
தேமுதிகவுக்கு வாக்களிக்கும் மற்றொரு பிரிவினர், கட்சிபேதங்களைத் தாண்டிய விஜயகாந்தின் தீவிர ரசிகர்களாக இருக்கவேண்டும். இவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்து, தேமுதிக-அதிமுக கூட்டணியை அனைவரும் ஏற்று வாக்களித்திருந்தால், அதிமுக+ ஓரிரு தொகுதிகளில் கூடுதல் வெற்றியைக் பெற்றிருக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதே போல, மேற்கு மாவட்டங்களில் காங்கிரசு தோல்வியடைந்ததற்கு புதிதாக முளைத்த சாதிக்கட்சிதான் காரணம் என்று காங் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். சாதிக்கட்சிக்கு வாக்களிப்பவர்கள் சுயசாதி அபிமானம் உடையவர்கள் தான். அவர்களில் அதிமுக, திமுக என எல்லோருமே அடங்குவர். சாதிக்கட்சி நின்றிருக்காவிடில், வாக்குகள் பெரும்பாலும் அவர்களின் பரம்பரைக்கட்சிக்குத் திரும்பியிருக்கும்.
பொதுவாக, இந்தப் பகுதிகளில் அதிமுக தான் அதிக செல்வாக்குடைய கட்சி என அறியப்படும் நிலையில், சாதிக்கட்சி நின்றிருக்காவிடில் அதிமுக+ இன்னும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கும் என்பதே என் எண்ணம்.
காங். தோல்விக்கு வேறுகாரணங்களை ஆராய்தல் நல்லது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த தேர்தலில் மற்றொரு கவனிக்கவேண்டிய அம்சம் - பாமக போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருப்பது. ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற பெரும் தோல்வி. இதன் மூலம் மக்கள் ஓர் அழுத்தமான செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். நேர்மையான காரணங்கள் ஏதுமில்லாமல் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி தாவும் சிறிய கட்சிகள் கவனத்தில் நிறுத்தவேண்டிய செய்தி அது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாமாகவை வென்றதில் பெருமகிழ்ச்சியடைந்த திமுகவினர் மாம்பழங்களை தரையில் கொட்டி மிதித்துக் கொண்டாடியதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஏனோ, மதிமுகவை வென்றதற்காக பம்பரங்களை காலால் மிதித்துக் கொண்டாடியதாகத் தகவல்கள் இல்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவர் - 'இந்த மின்னணு ஓட்டுப்பதிவு வந்ததிலிருந்து என் மனசாட்சியே செத்துருச்சுங்க'
இவர் - 'ஏன் அப்படி சொல்றீங்க?'
அவர் - 'பின்ன என்னங்க... பணம் கொடுத்த எல்லாக் கட்சிக்கும் ஒட்டு போடற வசதி இதுல இல்லையே'
இவர் - ?????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! (மனதுக்குள்) 'ங்கொய்யால... காசு வாங்கிட்டு ஓட்டுப்போடறமேன்னு உங்க மனசாட்சி சாகாதே'
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தேர்தல் மை
வாக்காளன் பெறும்
தேர்தல்கால மரியாதைகளுக்கு
முற்றுப்புள்ளி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment
இனிய உளவாக......