Thursday, May 14, 2009

தேர்தல்கால விவாதங்கள்

தேர்தல் ஒரு ஜனநாயக நாட்டைப் பொறுத்தவரை மகத்துவமான நிகழ்வாக இருக்கவேண்டுமானால், அந்நாட்டின் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருந்தால் மட்டுமே முடியும். இல்லாமையும் கல்லாமையும் பரந்து நிலவும் இந்தியாவில் இன்று நிலைமை அப்படி இல்லை. இங்கு தேர்தல், வாக்கு விற்பனையாளர்களுக்கு அறுவடைக்காலம்; ஊடகங்களுக்கு உச்சகட்ட வியாபாரம்; நடுவண் அரசு, மாநில அரசு இரண்டுக்குமே வித்தியாசம் தெரியாத சாமான்யர்களுக்கு வெறும் சம்பிரதாயம்.


இன்றிருக்கும் அரசியல் ஆர்வலர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளும், கட்சி அனுதாபிகளுமே. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும், அதைத்தொடர்ந்து என்ன நடக்கும் என்பன போன்ற அவர்களின், அனுமானங்களின் மீதான பரபரப்பு விவாதங்களே பார்வை ஊடகங்களில் இன்று அதிகளவில் அரங்கேறுகின்றன. உண்மையில் இந்தக் கூத்துக்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அர்த்தமற்றவை ஆகிவிடும் மலிவான பொழுதுபோக்குகள். இவை மக்களை இன்றைய சாக்கடை அரசியலை சகித்துக்கொள்ளும் மனோபாவத்துக்குப் பழக்கி, செக்குமாட்டு அரசியலுக்கே வழிநடத்துகின்றன. சிந்தனைக்குச் செலுத்துவதில்லை. பதிலாக, அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள் தவிர்த்த அரசியல்/சமூக ஆர்வலர்களால், தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தால் மக்கள் நலனுக்கு ஏற்றது என்பது போன்ற விவாதங்கள், பரப்புரைகள் ஊடகங்களில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டால் மக்களுக்கு ஆரோக்கியமான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வழிவகுக்கும். நாளடைவில், அரசியல் மாற்றங்களையும் நிகழ்த்தும்.

No comments:

Post a Comment

இனிய உளவாக......

Pages

Flickr