Sunday, May 31, 2009

சிந்தனை செய் மனமே! - 1

தீண்டாமை
===========
குழப்பத்தில் சிறுவன்
ஒரே தேநீர்
இருவேறு குவளைகளில்


மாறாமை
==========
மணக்கோலத்தில் அம்மன்
தரிசனத்தில் இளம் விதவை
வருடந்தோறும்


வளையாமை
============
மேசை நிறைய கோப்புகள்
நாற்காலி காலியாக
அரசு அலுவலகம்

Monday, May 25, 2009

கலக்கல் 25.05.2009 (தேர்தல் ஸ்பெஷல்)

(மக்களவைத் தேர்தலில் தமிழக முடிவுகளைப் புரிந்து கொள்ளும் ஒரு முயற்சி)

இந்த முறை, தமிழகத்தைப் பொறுத்தவரை ஈழத்தமிழ் உறவுகளின் இன்னல்களுக்குத் துணைபோனவர்களுக்கு மக்கள் தம் எதிர்ப்பைகாட்ட கிடைத்த ஒரு வாய்ப்பாக தேர்தல் முன்னிறுத்தப்பட்டது. ஆனால், பெரும்பாலான இன உணர்வாளர்களின் கணிப்பை, எதிர்பார்ப்பை மீறிய முடிவுகள் கிடைத்திருக்கின்றன. ஊரில் வெற்றிக்கூட்டணிக்கு வாக்களித்த சிலரிடம் பேசிப்பார்த்தேன், என் தந்தையார் உட்பட. இவ்வாட்சியின் (நல, இலவச) திட்டங்கள் ஏதோ ஒரு விதத்தில் அவர்களை சென்றடைந்திருப்பதையே குறிப்பிட்டார்கள். கடன் தள்ளுபடி, இலவசத் தொலைக்காட்சி, மலிவுவிலை அரிசி..... இப்படி ஆளாளுக்கு ஒன்று. (அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இதற்கான நன்றியுணர்ச்சியைக் காட்டியிருக்கலாம்?!).

சாதாரண மக்களுக்கு அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக் முன்னால் இனநலன் பெரிதாகத் தெரிவதில்லை. தமிழர்பிரச்சனை இன்று உச்ச கட்டத்தில் இருக்கும் போதே இந்த நிலமை என்றால்..... உண்மையில் தமிழின உணர்வாளர்களுக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கும். ஈழத்தமிழர்களுக்கான குரல்களை, தியாகங்களை அலட்சியமும் அவமானமும் செய்த சில காங். தலைவர்களை தமிழக மக்கள் குறி வைத்து தோற்கடித்தது அவர்களுக்குக் குறைந்தபட்ச ஆறுதல்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெற்றிக்கூட்டணியில், திமுக போட்டியிட்ட 21-ல் 17 தொகுதிகளை (81%) கைப்பற்ற, காங். 16-ல் 9-தொகுதிகளையே (56%) வென்றிருக்கிறது. இவ்விரு கட்சிகளும் வென்ற, தோற்ற தொகுதிகளில் வாக்குவித்தியாசங்களின் சராசரி கீழே இருக்கிறது.

வென்ற தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் (சராசரி)
திமுக - 83,878
காங். - 37,367

தோற்ற தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் (சராசரி)

திமுக - 39,946 காங். - 42,244
காங். வெற்றி பெற்ற சராசரி வாக்குகள் வித்தியாசத்தைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இது அதன் கூட்டணிக்கட்சியான திமுகவோடு ஒப்பிட்டால் எதிர்மறையாக இருப்பதுடன், பெரும் வாக்கு வித்தியாசமும் புலப்படுகிறது.

இம்முடிவுகள், திமுக கூட்டணிக்குள்ளேயே திமுக-க்கு ஆதரவு காங்கிரசுக்கு எதிர்ப்பு என்பதுபோன்ற ஒரு மனோநிலை வாக்காளர்கள் மத்தியில் நிலவியிருந்ததின் வெளிப்பாட்டை உணர்த்துகிறது. ஆளும் கட்சியின் திட்டங்களினால் திமுகவுக்கு ஆதரவான ஓர் அலை மக்களிடம் இருந்த வேளையில், ஈழப்பிரச்சனையால் காங்கிரசுக்கு எதிரான ஒரு மனநிலையும் அவர்களிடம் இருந்திருக்கிறது எனக் கணிக்கலாம். இதன் அடிப்படையில் பார்த்தால், ஈழப்பிரச்சனையால் பாதிப்புக்கள்ளான காங்கிரசை திமுகவே கரையேற்றியிருக்கிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தேமுதிக வாக்குகளைப் பிரித்தது அதிமுக+ வெற்றியைப் பறித்துவிட்டதாகவும், அக்கூட்டணியில் இணைந்திருந்தால் அதிமுக+ பெரும்பான்மையான தொகுதிகளில் வென்றிருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. தேமுதிக கட்சிக்கு விரும்பி வாக்களிப்பவர்கள் பெரும்பாலும் திமுக, அதிமுக இரண்டுக்கும் ஒரு மாற்று வேண்டும் என நினைப்பவர்கள் தான். தேமுதிக போட்டியிடாதிருந்தால் அல்லது அதிமுகவோடு கூட்டணி சேர்ந்திருந்தால், மாற்றுவேண்டும் என நினைப்பவர்களின் வாக்குகள் அனைத்தும் நிச்சயம் அதிமுக+ க்கு சென்றிருக்கும் என்று கூறமுடியாது.

தேமுதிகவுக்கு வாக்களிக்கும் மற்றொரு பிரிவினர், கட்சிபேதங்களைத் தாண்டிய விஜயகாந்தின் தீவிர ரசிகர்களாக இருக்கவேண்டும். இவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்து, தேமுதிக-அதிமுக கூட்டணியை அனைவரும் ஏற்று வாக்களித்திருந்தால், அதிமுக+ ஓரிரு தொகுதிகளில் கூடுதல் வெற்றியைக் பெற்றிருக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதே போல, மேற்கு மாவட்டங்களில் காங்கிரசு தோல்வியடைந்ததற்கு புதிதாக முளைத்த சாதிக்கட்சிதான் காரணம் என்று காங் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். சாதிக்கட்சிக்கு வாக்களிப்பவர்கள் சுயசாதி அபிமானம் உடையவர்கள் தான். அவர்களில் அதிமுக, திமுக என எல்லோருமே அடங்குவர். சாதிக்கட்சி நின்றிருக்காவிடில், வாக்குகள் பெரும்பாலும் அவர்களின் பரம்பரைக்கட்சிக்குத் திரும்பியிருக்கும்.

பொதுவாக, இந்தப் பகுதிகளில் அதிமுக தான் அதிக செல்வாக்குடைய கட்சி என அறியப்படும் நிலையில், சாதிக்கட்சி நின்றிருக்காவிடில் அதிமுக+ இன்னும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கும் என்பதே என் எண்ணம்.

காங். தோல்விக்கு வேறுகாரணங்களை ஆராய்தல் நல்லது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த தேர்தலில் மற்றொரு கவனிக்கவேண்டிய அம்சம் - பாமக போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருப்பது. ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற பெரும் தோல்வி. இதன் மூலம் மக்கள் ஓர் அழுத்தமான செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். நேர்மையான காரணங்கள் ஏதுமில்லாமல் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி தாவும் சிறிய கட்சிகள் கவனத்தில் நிறுத்தவேண்டிய செய்தி அது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாமாகவை வென்றதில் பெருமகிழ்ச்சியடைந்த திமுகவினர் மாம்பழங்களை தரையில் கொட்டி மிதித்துக் கொண்டாடியதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஏனோ, மதிமுகவை வென்றதற்காக பம்பரங்களை காலால் மிதித்துக் கொண்டாடியதாகத் தகவல்கள் இல்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவர் - 'இந்த மின்னணு ஓட்டுப்பதிவு வந்ததிலிருந்து என் மனசாட்சியே செத்துருச்சுங்க'
இவர் - 'ஏன் அப்படி சொல்றீங்க?'
அவர் - 'பின்ன என்னங்க... பணம் கொடுத்த எல்லாக் கட்சிக்கும் ஒட்டு போடற வசதி இதுல இல்லையே'
இவர் - ?????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! (மனதுக்குள்) 'ங்கொய்யால... காசு வாங்கிட்டு ஓட்டுப்போடறமேன்னு உங்க மனசாட்சி சாகாதே'
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தேர்தல் மை











 வாக்காளன் பெறும்
தேர்தல்கால மரியாதைகளுக்கு
முற்றுப்புள்ளி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Sunday, May 24, 2009

நிலவை ரசிப்பவனின் குறிப்புகள்

























நான் கவிதை எழுத
யோசிக்கும்பொழுதெல்லாம்
பாடாய்ப் படுகிறது நிலா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~




















தேய்ந்தாலும் அழகுதான்
வானத்து நிலா
மட்டும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~



















மேகங்களை வெறுக்கிறேன்
நிலவை மறைக்கும்
தருணங்களில்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~


























குளத்துநீரில் நிலவு
கலங்கும் நெஞ்சம்
மீன்களே கடித்துவிடாதீர்கள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~






















நிலவில்லா இரவுகள்...
வானத்தில் மட்டுமல்ல
மனதிலும் வெறுமை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(நன்றி: படங்கள் - இணையத்தளம்) 

Friday, May 15, 2009

தமிழகம் : ஐபின்-சிஎன்என் வாக்குக்கணிப்பு முடிவுகள்

ஐபின்-சிஎன்என் வாக்குக்கணிப்பு முடிவுகள்


திமுக கூட்டணி - 47%
அதிமுக கூட்டணி - 34%
தேமுதிக - 10%
மற்றவர்கள் - 9%


கிராமப்புறங்களில் திமுக+ க்கு அதிக செல்வாக்கு!


ஆச்சரியப்படும் வகையில் இக்கணிப்பு முடிவுகள் இருப்பதாக மேலும் தெரிவிக்கிறது.


இந்தியா : வாக்குக்கணிப்பு முடிவுகள்


கட்சிகள் தொகுதிகள்

காங்.+ - 210-225
பாஜக+ - 180-195
3ம் அணி - 93-110
4ம் அணி - 25-35
மற்றவர்கள் - 15-20

Thursday, May 14, 2009

தேர்தல்கால விவாதங்கள்

தேர்தல் ஒரு ஜனநாயக நாட்டைப் பொறுத்தவரை மகத்துவமான நிகழ்வாக இருக்கவேண்டுமானால், அந்நாட்டின் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருந்தால் மட்டுமே முடியும். இல்லாமையும் கல்லாமையும் பரந்து நிலவும் இந்தியாவில் இன்று நிலைமை அப்படி இல்லை. இங்கு தேர்தல், வாக்கு விற்பனையாளர்களுக்கு அறுவடைக்காலம்; ஊடகங்களுக்கு உச்சகட்ட வியாபாரம்; நடுவண் அரசு, மாநில அரசு இரண்டுக்குமே வித்தியாசம் தெரியாத சாமான்யர்களுக்கு வெறும் சம்பிரதாயம்.


இன்றிருக்கும் அரசியல் ஆர்வலர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளும், கட்சி அனுதாபிகளுமே. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும், அதைத்தொடர்ந்து என்ன நடக்கும் என்பன போன்ற அவர்களின், அனுமானங்களின் மீதான பரபரப்பு விவாதங்களே பார்வை ஊடகங்களில் இன்று அதிகளவில் அரங்கேறுகின்றன. உண்மையில் இந்தக் கூத்துக்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அர்த்தமற்றவை ஆகிவிடும் மலிவான பொழுதுபோக்குகள். இவை மக்களை இன்றைய சாக்கடை அரசியலை சகித்துக்கொள்ளும் மனோபாவத்துக்குப் பழக்கி, செக்குமாட்டு அரசியலுக்கே வழிநடத்துகின்றன. சிந்தனைக்குச் செலுத்துவதில்லை. பதிலாக, அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள் தவிர்த்த அரசியல்/சமூக ஆர்வலர்களால், தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தால் மக்கள் நலனுக்கு ஏற்றது என்பது போன்ற விவாதங்கள், பரப்புரைகள் ஊடகங்களில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டால் மக்களுக்கு ஆரோக்கியமான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வழிவகுக்கும். நாளடைவில், அரசியல் மாற்றங்களையும் நிகழ்த்தும்.

Tuesday, May 12, 2009

கலக்கல் 12.05.2009

அட! இது உண்மையிலேயே கலக்கல் ஃபார்மேட்டுதான்.

சின்னச் சின்னதா பலவிசயங்கள கோர்த்துவிட்டு கலக்கலாம். இல்ல, பதிவா போடாலாமுன்னு தோன்றதையெல்லாம் அப்பப்ப நாலுவரி தட்டி ட்ராப்ட்ல போட்டுவச்சு, நாலுவாரமாகியும் தனிப்பதிவு அளவுக்கு இ...ழு...க்க முடியலேன்னா கலந்து கட்டி அடிச்சும் விட்டுரலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொஞ்ச நாளா தினசரியில வருகிற திரைப்பட விளம்பரங்கள கவனித்ததில்....... Pasanga, Newtonin moonraam vidhi ன்னு அப்படியே ஆங்கிலத்தமிழ்-ல படப்பெயர விளம்பரப்'படுத்த'ராங்க. 'தமிழ் எழுதப்படிக்க' தெரியாத தமிழர்கள் அதிகமாகிக்கிட்டே வர்றாங்கன்னு சமீபத்துல ஒரு தொலைக்காட்சி விவாதத்துல பார்த்தேன். அதுல, தமிழ் எழுதப்படிக்கத் தெரியாமலேயே தமிழ்நாட்டுல வாழ்ந்துடலாம், ஒன்னும் சிரமமில்லைனு சிலபேர் சொன்னது இப்பப் புரியுது!

என்ன கொடுமை இதுன்னு முதல்ல தோனுச்சு... யோசிச்சுப் பார்த்தா, 'ஆங்கிலம் எழுதப்படிக்கத்' தெரியாத தமிழர்களுக்காக மெடிக்கல்ஸ், ஹோட்டல், ஸ்வீட் ஸ்டால்-னு தமிங்கிலத்தில் எழுதறது இல்லையா என்ன? அப்படித்தான் இதுவும்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.

எல்லாம் தமிழுக்கு வந்த சோதனை !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிறுவயதிலிருந்தே நடைமுறையில் பழக்கப்பட்டுப்போன விசயங்களை நாம் அவ்வளவாக கூர்ந்து கவனிப்பதில்லை போலும். உதாரணத்திற்கு இந்த சொடக்கு போடறது. சில எசமானர்கள் வேலைக்காரர்களை சொடக்குப் போட்டு அழைப்பார்கள் அல்லது 'ம் சீக்கிரம்' என விரட்டுவார்கள். நமக்கு திடீர்னு ஏதாவது புது யோசனை தோன்றினால் உடனே ஒரு சொடக்குப்போட்டு மெய் சிலிர்த்துக்கொள்வதும் உண்டு, குறிப்பா மத்தவங்க பக்கத்தில் இருக்கும்போது. விசயம் என்னன்னா, இந்த சொடக்குப் போடும் போடு சத்தம் எப்படி, எங்கு உண்டாகிறது?

கட்டைவிரலையும் நடுவிரலையும் சேர்த்து அழுத்தும் இடத்திலிருந்து சத்தம் வருவதாக மேலோட்டமா நம்பிக்கிட்டிருப்போம். அப்படியில்லை. உண்மையில், அழுத்தி விடும் போது நடுவிரலுக்கு விசை தான் கிடைக்கிறது. அந்த விசையுடன் நடுவிரல் கட்டைவிரலின் அடிப்பகுதியில் அடிக்கும் போது சத்தம் வருது. ஆமாம், சத்தம் கட்டைவிரலின் அடிப்பாகத்திலிருந்துதான் எழுகிறது. அழுத்தத்துக்கு தகுந்த விசை, விசைக்குத் தகுந்த சத்தம்!

இந்த சின்ன விசயத்தை இவ்வளவு நாள் கவனிக்காம விட்டுட்டமேன்னு நினைச்சு நண்பர்களிடம் சொன்னபோது, அட ஆமால்ல.... நாங்களும் கவனிக்கலையேன்னாங்க.

கவனிக்காதவங்க ஒரு சொடக்கு போட்டுப்பாருங்க!
(என்னா ஒரு ஆராய்ச்சி!)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இரண்டு குழந்தைத்தனமான ஜோக்குகள். பழையவை.

அம்மா, குழந்தையோட கையில சின்னதா ஒரு சாக்பீச கொடுத்து, 'ஆ' போடச்சொன்னாங்க...
குழந்தை சாக்பீச வாயில போட்டுக்கிச்சு!

அப்பா குழந்தைக்கு பொம்மை வாங்க கடைக்குப் போனார். 'இந்த பொம்மைகளையெல்லாம் எப்படி செஞ்சீங்க?'-னு கடைக்காராரை கேட்டார். கடைக்காரரும் 'எல்லாமே என் மூளையப் பயன்படுத்தி செஞ்சது'-ன்னு பெருமையடித்தார். பொம்மைகள் களிமண்ணால் செய்யப்பட்டிருந்தன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடைசியா, ஃபார்மேட்டுக்காக... ஒரு குட்டி கவுஜை ;)

திரும்பும் கடலலை
காலடிமணல் கரைய
மனம் கரையும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Wednesday, May 6, 2009

மாயை என்றொரு மாயை: ஹாய் மதனுக்கான ஓர் எதிர்வினை

'மாயை' என்ற வார்த்தைக்கு இந்த உலகம் கட்டமைத்திருக்கும் (கட்டமைத்துக்கொண்டிருக்கும்) ஒரு தோற்றத்தினைப் பற்றிய, குறிப்பாக, ஆனந்த விகடனில் வெளிவரும் 'ஹாய் மதன்' என்ற கேள்வி-பதிலில் மாயை என்ற கேள்விக்கான பதிலின் எதிர்வினையே இது.

அந்த கேள்வி பதிலை அப்படியே இங்கு இட்டுள்ளேன்.
=======================================================
ஆனந்த விகடன் 03-12-2008: ஹாய் மதன் கேள்வி-பதில் :

கேள்வி: 'எல்லாமே மாயை' என்கிறார்கள் ஞானிகள். இதை (நீங்கள் நம்பினால்) உங்கள் ஸ்டைலில் விளக்கவும்?

பதில்: அது சத்தியமான வார்த்தை. உதாரணமாக, 'நில்' என்கிறோம். உடனே நிற்கிறீர்கள் அல்லவா? இதுவே மாயைதான். காரணம், எதுவுமே நிற்பதில்லை. பூமி ஒரு நொடிக்கு 460 மீட்டர் வேகத்தில் நகருகிறது. அல்லது சுழல்கிறது. அதாவது மணிக்கு 1,000 மைல்கள் வேகம். பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. ஒரு விநாடிக்கு 30 கி.மீ. வேகத்தில். மொத்தமாக நம் சூரிய மண்டலம் பால்வீதியை (Milky way galaxy) விநாடிக்கு 220 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிறது. பால்வீதியும் விநாடிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் Great Attractor என்கிற, அகண்ட கண்டத்தில் 15 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒரு பகுதியை நோக்கி விரைந்துகொண்டு இருக்கிறது. மொத்தத்தையும் கூட்டினால் நீங்கள் விநாடிக்கு பல்லாயிரக்கணக்கான கி.மீ. வேகத்தில் (எப்போதும்) நின்றபடி போய்க்கொண்டு இருக்கிறீர்கள். பூமி என்பதே அந்தரத்தில் இருப்பதால் பறந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதே சரியானது.
இப்போது சொல்லுங்கள். 'நில்' என்பது மாயைதானே?
=======================================================

'நிற்பது' என்ற செயல் மாயையானது என்று எவ்வளவு பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் குறிப்புகளோடு ஒப்பிட்டு விளக்கியிருக்கிறார். இதைவிட அறிவியலுக்கு வேறு இழுக்கு ஏதும் இருக்கமுடியாது. எல்லாம் மாயை என்று அறிவியலாளர்கள் எண்ணியிருந்தால் இந்த அறிவியல் உண்மைகளையே இவர் குறிப்பிட்டு இருக்கமுடியாது என்று இவருக்கு தெரியாதா அல்லது தெரியாததுபோல் இத்துணை உண்மை கண்டுபிடிப்புகளையும் மாயை என்ற வார்த்தைக்குள் அடைக்க முயல்கிறாரா? நல்லவேளையாக அறிவியல் செய்திகளனைத்தும் மாயை என்று நேரிடையாக கூறாமல் விட்டுவிட்டார்.

மாயை என்பது ஒரு மதம் சார்ந்த சொல்; அதை எப்போதும் அறிவியலோடு தொடர்பு படுத்த முடியாது. இதை ஒரு மதத்தலைவர் சொல்லியிருந்தாலாவது விட்டுவிடலாம், ஆனால் மதன் கூறியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

'நிற்பது' என்பது அறிவியலின்படி ஒரு சார்பியல் செயலாகும். இங்கு சார்பு என்பது மறைந்திருக்கிறது. உதரணமாக, பேருந்தில் நடத்துனர் 'இருக்கையில் அமருங்கள்' என்று சொன்னால், அது 'பூமியை சார்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தில் இருக்கும் இருக்கையில் அமருங்கள்' என்பதையே குறிக்கிறது. இப்படி பல வார்த்தைகள் எல்லா மொழிகளிலும் சார்பு என்ற பொதிந்துகிடக்கிற பொருளோடுதான் சேர்ந்து வரும் ( உ-ம்: வேகம், தூரம்). பேருந்தினுடைய வேகமானது பூமியின் மேற்பரப்பில் ஒரு நிலையான இடத்தை சார்ந்தே குறிக்கப்படுகிறது. அதாவது, சாலையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பேருந்து நகர்ந்த தொலைவு / எடுத்துக்கொண்ட நேரம். இதுவே, நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தில் இருக்கும் ஒருவர் அவருக்கு எதிர்திசையில் செல்லும் பேருந்தை பார்க்கும் பொழுது அது மிக வேகமாகச் செல்வதாக உணர்வார் (இரண்டு பேருந்துகளின் வேகத்தினுடைய கூட்டுத்தொகை). இவ்வாறான சார்பியலை தெளிவாக விளக்க கலிலியோ மற்றும் ஐன்ஸ்டைன் போன்ற அறிவியலாளர்கள் சார்பியல்/ சிறப்பு சார்பியல் தத்துவங்களைப் படைத்திருக்கின்றனர். இந்த சார்பியல் விதிகளைப் பற்றி மதன் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை(?!). எனவே, இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அறிவியல் சாயம் பூசாமல் இருக்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ஒருவேளை, Great Attractor என்கிற, அகண்ட கண்டத்தில் 15 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு பகுதியை நோக்கி விநாடிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் விரைந்துகொண்டு இருக்கிற பால்வீதியில், விநாடிக்கு 220 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிற சூரிய மண்டலத்தில், விநாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சூரியனையும் சுற்றிக்கொண்டு, நொடிக்கு 460 மீட்டர் வேகத்தில் சுழல்கிற பூமியைச் சார்ந்து இந்த இடத்தில் நிற்கிறோம் என்று சொன்னால் இது மாயை இல்லை என்று ஏற்றுக்கொள்வாரோ?

அறிவியல் மற்றும் மதம் பற்றி முனைவர். சந்தனா சக்கரவர்த்தி, "அறிவியலும் மதமும் ஒன்றாகிவிடமுடியுமா?" என்ற தலைப்பில் மார்ச் 16-31, 2009 உண்மை இதழில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

பின்குறிப்பு : இந்த எதிர்வினையை, அப்போதே ஆனந்த விகடனின் பின்னூட்டத்தில் எழுத நினைத்தேன். ஏனோ முடியாமல் போய்விட்டது. முனைவர். சந்தனா சக்கரவர்த்தி அவர்களின் கட்டுரையை வாசித்ததும், அவர் கூறிய அறிவியல் சாயம் மதனின் இந்தப் பதிலில் இருப்பதாக நினைவிற்கு வந்ததால் இப்போது பதிகிறேன்.

=============================================

Pages

Flickr